சிங்கப்பூரில் பணிபுரியும் பொறியாளர்
திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் கஸ்தூரி அம்மாள் 29-12-2020 அன்று இயற்கை
எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றோம். அம்மையாருக்கு எங்களது இதய அஞ்சலி.
2019 மார்ச் மாதம் சிங்கப்பூர் வந்திருந்த அம்மையார் தமிழர் பேரவை பன்னோக்குக்
கூட்டுறவுக் கழகத்திற்கு குடும்பத்தாருடன் வருகை தந்து பார்வையிட்டு, கழகத்தாரின் பணிகளையும், திருவள்ளுவர் தமிழ்வளர்ச்சிக்
கழகத்தாரின் பணிகளையும் கேட்டறிந்து பாராட்டினார். குடும்ப நலத்துடன், பொது நலனுக்காவும் சேவையாற்றிய
அம்மையாரின் முயற்சிகள் தொடர வேண்டும்.
கஸ்தூரி அம்மையாரின் நினைவுகளைத்
தாங்கிய கட்டுரையின் மீள்பதிவு...
‘ கஸ்தூரி அம்மாளும் மகளிர் முன்னேற்றமும் ‘
கஸ்தூரி அம்மாள் 16-02-1956-ல் அப்போதைய கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் இரெட்டியூர் கிராமத்தில்
வி.ஆறுமுகம்-பிச்சையம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். மூத்த
மகளான அக்கா ரோஸ்பட்டு, திரு அ.மாசிலாமணி
எனும் தமது மாமாவைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரிலேயே வசித்துவந்தார்.
கஸ்தூரி அம்மாள் முன்னாள் திருச்சி
மாவட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம் வட்டம் சுண்டிப்பள்ளம் கிராமத்தில் மத்திய
தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றிய திரு கி.விஸ்வலிங்கம் என்பவரைத் திருமணம்
செய்துகொண்டு, மத்திய
அரசு பணியின் போக்கிற்கிணங்க பல்வேறு வட மாநில பகுதிகளில் பயணித்து இந்தியாவின்
பன்முகத்தன்மை மற்றும் மொழி, தட்ப
வெப்ப பழக்க வழக்கங்களைக் கண்டுணர்ந்திருந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்குச்
சென்று வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அந்நிலையில் அங்கு நிலவும் பண்பாட்டு சூழலை
உற்று நோக்குகிறார், குறிப்பாகக்
கள்ளச்சாராயத்தின் தீமை
மற்றும் அதனால் பெண்கள் அடையும் துன்பம் கண்டு மனம் பதைக்கிறார், வினையாற்றவும் எத்தனிக்கிறார்.
காலசுழற்சியில், கஸ்தூரி
விஸ்வலிங்கம் தம்பதியர் தன் மூன்று ஆண்பிள்ளைகளையும், அவர்களைக் கடுமையான சூழலிலும் பொறியியல்
பட்டதாரிகளாக வளர்த்தெடுத்தனர்.
இந்நிலையில் குழந்தைகளின்
கல்லூரியிறுதி வேலைவாய்ப்புகள், கணவரின்
பணிச்சூழல் என அனைத்தையும் கருத்தில் கொண்டு சொந்தவூரான சுண்டிப்பள்ளம்
கிராமத்திலேயே நிரந்தரமாகத் தங்கலானார். அந்தக் கால எட்டாம் வகுப்புப் படிப்பு,
இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்குப்
பயணித்ததின் அனுபவம் காரணமாகத் தமது குடும்ப வரவுச் செலவு மற்றும் அக்கம் பக்கம்
வசிக்கும் உறவினர்கள் குடும்ப வரவுச் செலவு சேமிப்பு கணக்கைச் சரிப்பார்த்தலென
உதவி வருவது வழக்கமாயிருந்தது.
இந்தக் காலச்சூழலில்தான் தமிழக
அரசால் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் & ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ்
‘மகளிர் சுய உதவிக்குழு’ என்ற அமைப்புகளைக் கட்டமைத்து இயக்கியது. இவ்வமைப்பு
கிராமத்தின் பிற்போக்கு நிலையை நீக்கபயன்படுமெனக் கஸ்தூரி அம்மாள் ஏறத்தாழ
பன்னிரெண்டு சுய உதவிக்குழுக்கள் உருவாகக் காரணமாகவும் தலைவராகவும் ஊக்குனராகவும்
பொறுப்பேற்று தொடர்ந்து 18 ஆண்டுகளாகத் தொண்டாற்றியும், வழிகாட்டியும் வருகிறார். இவற்றில் கஸ்தூரிபாய்
குழு மற்றும் மீராபாய் குழுவைப் பிரதானமாகப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
நபருக்கு 101 ரூபாயில் ஆரம்பித்த
சிறுசேமிப்பு, பின்னாட்களில்
படிப்படியாக அரசு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம்வரை கடனுதவியும் பெற்று முறையே
சுழற்சியில் 10 லட்சம் வரையிலும் சுழல்நிதி 60 ஆயிரம் வரையிலும் புரளக்கூடிய
குழுக்களாக வலுப்பெற்றன.
இவ்வனைத்து நிதி சுழற்சிகளும்,
அடிப்படை வாழ்வாதாரமற்ற
மக்களிடத்தில் பெண்களே தங்களின் சொந்த முயற்சியில் குடும்பச் செலவுகளுக்கென,
ஆடு மாடு வாங்கி மேய்த்தல் போன்ற
சிறுதொழில்கள் செய்ய, பிள்ளைகளின்
படிப்புக்காக மற்றும் மருத்துவ செலவு போன்றவகையினங்களில் பயன்படுத்தி பலனுற்றனர்.
இவற்றில் கஸ்தூரி அம்மாளின்
அர்ப்பணிப்பு அளப்பரியது, நேர்மையாகவும்,
தூய்மையாகவும், திறம்படவும் உறுதியாகச்
செயல்பட்டார். இத்தருணத்தில் பணியாளர்கள் நெய்வேலி ஜெரால்டு மற்றும் செங்கல்மேடு
பாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்பாக உதவி செயல்பட்டனர். மகளிர் குழுவின் மாவட்ட தலைமை
அன்றைய சூழலில் கஸ்தூரி அம்மாளை உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியின்றி
கவுன்சிலராகத் தேர்வு செய்ய முயற்சித்ததும், அம்மையார் அதை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
அரசியலில் நேரடி நாட்டமில்லாவிட்டாலும், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்கு பங்காற்றிய இந்திய
மனித உரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் திரு L.இளையபெருமாள் Ex-MP அவர்களின் மீது சிறுவயது முதற்கொண்டே மிகுந்த
மரியாதையும் பற்றும் வைத்திருந்தார்.
கொடும் அரக்கனாகச் செயல்பட்டு வந்த
கள்ளச்சாராய புழக்கத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு கொடியேந்திய விழிப்புணர்வு
ஊர்வலம், சம்பந்தப்பட்ட
அரசு அலுவலகர்களிடம் முறையீடு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து
முறையிட்டுக் கள்ளச்சாராயம் கட்டுபடுத்தப்பட்டது, முற்றிலும் துடைத்தெறியவும்பட்டது. சுற்று
வட்டாரங்களில் கள்ளச்சாராயம் ஒழியவும் காரணமாக இருந்தார். இத்தருணத்தில் கஸ்தூரி
அம்மையாரும் சுண்டிப்பள்ளம் கிராம பெண்களும் பல சமூக விரோதிகளின் வெறுப்பையும்,
ஆணாதிக்கவாதிகளின் அவதூறுகளையும்
எதிர்கொண்டு புறந்தள்ளினர்.
இவற்றின் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர்
வகுப்பைச் சார்ந்த மக்கள் அடர்த்தியாக வாழும் அப்பகுதி பெண்களின் எழுத்தறிவு
துளிர்விட்டது. சிறுந்தொகையாயினும் பணப்புழக்கம் ஏற்பட்டது முறையே வரவு செலவைக்
கையாளுதலிருந்து தொழில் அறிவுயெனவும், சமூக ஆணாதிக்க முரண்களை எதிர்கொள்கையில் கண்காணிப்பு அறிவு வளர்ந்து
சீர்திருத்தத்திற்கு வித்திட்டது உண்மைதான்.
பல்வேறு பழக்கங்களால் சீரழிந்திருந்த
அப்பகுதியை திசை மாற்றும் வண்ணம் கஸ்தூரி அம்மையார் ஆன்மிக நெறிகள் கலந்தும்
பயணித்தார் மற்றும் சிறுதெய்வ வழிபாட்டு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும்
பங்கேற்றும் அப்பகுதி மக்களுடன் நேர்திசையில் பயணித்தார்.
மத்தியதொழில் பாதுகாப்பு படையில்
ஆய்வாளாரக இருந்து ஓய்வு பெற்ற தமது கணவர் கி.விஸ்வலிங்கம் மற்றும் அக்கா
ரோஸ்பட்டு ஆகியோருடன் மார்ச் 2019 -ல் சிங்கையில் வசிக்கும் தன் மூத்த மகனின்
குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தவர், சிங்கைவாழ் தமிழ் ஆர்வலர் சோ.வீ.தமிழ்மறையான் அவர்களை மரியாதை
நிமித்தம் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். 63 அகவையாகும் கஸ்தூரி
அம்மையாரிடம், கிராம
புற மகளிர் முன்னேற்றம் மற்றும் அவரின் தனிப்பட்ட தொண்டுள்ளத்திற்கான முனைப்பை
பற்றியும் கேட்டபோது, பெண்கள்
எந்தச்சூழலிலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியமும், தடையாய் இருப்பனவற்றை எதிர்க்கும்
துணிவும் வேண்டும் என்றார். இவற்றை உறுதிசெய்திட மைய, மாநில அரசுகளிடம் திடமான ‘பெருந்திட்டம்’
வேண்டுமெனவும், சமூகப்பணி
தான் மட்டுமே செய்ய முடியும் என்று நம்பவில்லை எனவும் தமது குடும்பத்தில் பலரும்
ஈடுபட்டே வந்துள்ளதாகவும் என்று கூறியவாறே புதியதாய் வாங்கிய மிதிவண்டியை ஓட்டிப்
பழகிக்கொண்டிருக்கும் தமது பேத்தி சிறுமி நிலாவுக்கு உதவ சென்றுவிட்டார்.
~சிவசாமி பிரமன்,
தலைமை ஆசிரியர் 'தமிழ் அமுதம்' இலக்கிய இதழ்,
சிங்கப்பூர்...