நன்றி நவிலல்
***
வணக்கம்!
எமது தந்தையார் திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின்
வாழ்க்கைக் குறிப்புகளை 'மற்றுமொரு
ஆளுமை திரு.கி.விஸ்வலிங்கம் 75* !!!' என்ற தலைப்பில் வரலாறாக வார்த்திட்ட சிங்கப்பூரின் மூத்த முன்னோடி
தமிழாசிரியரும், தமிழ்
அமுதம் இலக்கிய இதழின் தலைமை ஆசிரியருமான திரு.சிவசாமி பிரமன் அவர்களுக்கும்,
ஒப்புதல்
அளித்து உதவிய அவரது துணைவியார் திருமதி.சந்திரா அவர்களுக்கும் மற்றும் அனைத்து
வகைகளிலும் உதவிட்ட சிங்கை வாழ் தனித்தமிழ் பற்றாளர் நண்பர் திரு.சோ.வீ.தழிழ்மறையான்
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர் திரு.சிவசாமி பிரமன் அவர்கள்தான் கடந்த
2019 ஆம் ஆண்டில் அமரர்.திருமிகு.கஸ்தூரி அம்மாவின் வாழ்க்கையோட்டத்தை 'கஸ்தூரி அம்மாளும் மகளிர்
முன்னேற்றமும்' என்ற
தலைப்பிலான கட்டுரையாக எழுதித் தொகுத்தது, பின்னாளில் தினத்தந்தி நாளிதழில்
பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது தந்தையாருக்கு 73 வயதுதான் ஆகிறது,
இருப்பினும்
எங்கள் குடும்பத்தில் வழக்கமாக யாரும் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை, ஆகவே 73*, 74, 75 & 76 என
நான்கு ஆண்டுகளில் உள்ள ஒவ்வொரு நாளையும் பவள விழா பிறந்தநாளாகக் கொண்டாடத்
திட்டமிட்டு தொகுக்கப்பட்டுள்ள வாழ்க்கை குறிப்புகளை வரலாற்று ஆவணமாக முன்வைத்து
மகிழ்கிறேன். நன்றி...
அப்பா! பவள விழா பிறந்தநாள் வாழ்த்துகள் !!!
நினைவுகளுடன்...
~பொறியாளர் பாலகிருஷ்ணன்,
சிங்கப்பூர்.
18-07-2022.
***
சிங்கப்பூரில் சுமார் இருபது ஆண்டுகளாகக்
குடும்பத்தாருடன் வசித்து வரும் நண்பர் பொறியாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்,
கட்டுமானத்
துறையில் நிறைந்த அனுபவம் கொண்டவர், பொறியாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் சீரிய முயற்சியால் எழுதப்பெற்ற
'ஒரு
தனிமனிதனின் கதை' என்ற
துணைத் தலைப்பை ஏற்ற 'பரிணாமம்',
'தொடரும்
பரிணாமம்' ஆகிய
இரு நூல்களிலிருந்து அவரைப் பற்றிப் பலவும் அறிந்து பெரிதும் மகிழ்வுற்றோம்.
பல்லினச் சமூகத்தினரோடும் பழகும் ஜனநாயகப்
பண்பாளர், தமிழ்
அமைப்புகளோடு இணைந்து செயலாற்றும் முற்போக்காளரும் ஆவார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்,
அவரது
தந்தையார் அய்யா.திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின் 75 வது பிறந்தநாளை முன்னிறுத்தி
நினைவு கூறும் விதம் அவ்வப்போது அவரது வாழ்க்கை குறிப்புகளை வழங்கித்
தொகுத்தளித்திட வேண்டினார். அதனடிப்படையில் 'மற்றுமொரு ஆளுமை திரு.கி.விஸ்வலிங்கம் 75* !!!'
என்ற
தலைப்பிலான கட்டுரையைத் தங்கள் முன்வைப்பதில் பெருமையுறுகிறேன்.
பெருமகனாருக்கு பவள விழா பிறந்தநாள் வாழ்த்துகள்
!!!
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிங்கப்பூர்
வந்திருந்த திரு.கி.விஸ்வலிங்கம் மற்றும் திருமிகு.கஸ்தூரி அம்மையார் தம்பதியினர்
தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகத்திற்கு குடும்பத்தாருடன் வருகை தந்து
பார்வையிட்டு, கழகத்தாரின்
பணிகளையும், திருவள்ளுவர்
தமிழ்வளர்ச்சிக் கழகத்தாரின் பணிகளையும் கேட்டறிந்து பாராட்டினர். குடும்ப
நலத்துடன், பொது
நலனுக்காவும் சேவையாற்றிய இருவரின் முயற்சிகளும் தொடர வேண்டும்; தொடரும்.
***
மற்றுமொரு ஆளுமை திரு.கி.விஸ்வலிங்கம் 75* !!!
***
அய்யா திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் இன்னாள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்
ஒன்றியம், சுண்டிப்பள்ளம்
கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டத் தந்தையார் அமரர்.திரு.ப.கிருஷ்ணன் அவர்களுக்கும்,
தாயார்
அமரர்.திருமிகு.கி.பாக்கியம் அவர்களுக்கும் ஏழாவது கடைக்குட்டி மகனாக 18-01-1949
இல் பிறந்தவராவார். அண்ணன்கள் அமரர்.திரு.பெரியசாமி ஜானகி, அமரர்.திரு.சாமிக்கண்ணு பிச்சம்மாள்,
திரு.நாகராஜன்
கமலம் மற்றும் அக்காள்கள் அமரர்.திருமிகு.மீனாட்சி சுவாமிநாதன், அமரர்.திருமிகு.விசாலாட்சி இராமன்,
அமரர்.திருமிகு.அம்புஜம்
கிருஷ்ணன் ஆகிய அறுவரும் உடன் பிறந்தவர்களாவர்.
இந்திய தேசம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்குகையில், திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின்
குடும்பம் மட்டுமல்ல, மொத்தக்
கிராமமுமே வறுமையின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருந்த காலமது.
அப்படித்தான் அன்றைய இந்தியாவில் எளியோரின்
வாழ்நிலை இருந்தது. திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின் தந்தையார் திரு.ப.கிருஷ்ணன்
அவர்கள் குறிப்பிடத் தக்க அளவு விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்தார்.
இருப்பினும், வறுமைச்
சூழலுக்கான காரணம் வானம் பார்த்த பூமி என்பதால்தான். அந்தப் பூமியே தற்போது
மதிப்புமிக்க இடங்களாக, காலத்தால்
வழித்தோன்றல்களுக்குக் கையளிக்கப்பட்டது.
சிறு விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்களாகப்
பணியாற்றிய பெற்றோர்கள் எனப் பின்னணிச் சூழல் கொண்ட குடும்பத்தில், தந்தையாரின் கெடுபிடியாலும், தாயாரின் அரவணைப்போடும்
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் மட்டும் பத்தாம் வகுப்புவரைப் படித்தவராவார்,
பின்
இடைநிற்றலுக்கும் ஆளானவரானார்.
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின் தந்தையாரான
திரு.ப.கிருஷ்ணன் அவர்கள் அந்தக் காலத்தில் குறிப்பிடத் தக்க பள்ளிக் கல்வியை
படித்திருந்தவராவார். ஆகையால் தான் அவருக்கு 'பள்ளிக்கூடத்தார்' என்ற புனைப்பெயரும் இருந்தது. கல்வியின் பலனை
உணர்ந்திருந்ததால் கடைசி மகனாவது நன்றாகப் படிக்க வேண்டும் எனக் கடிந்து, கடுமையாகச் செயல்பட்டிருக்கிறார்.
தாயார் திருமிகு.கி.பாக்கியம் அவர்களும் உடல் உழைப்பாளிதான், விவசாய வேலைகளுக்குச்
செல்லக்கூடியவர். ஏழு பிள்ளைகளைப் பெற்ற மகராசி, தொடர் வறுமையிலும் அனைவருக்கும் ஒருவேளை, இருவேளை உணவையாவது உத்தரவாதப் படுத்த
வேண்டும்; உறுதிப்படுத்தியிருக்கிறார்.
திரு.ப.கிருஷ்ணன் அவர்களின் தந்தையின் பெயர்
பரட்டையன் என்பதாகும். பரட்டையன் உள்ளிட்ட குடும்பக் குழுவை 'வானரத்தான் குடும்பம்' எனவும் அழைப்பர்.
வறுமையின் பிடி இறுக பசி, பட்டினி தொடர, ஏனையச் சிறார்களைப் போலவே கூலி
வேலைகளுக்குச் செல்வது, தட்டு
ரிக்ஷா ஓட்டுவது, மளிகைக்
கடை வேலையெனப் பயணித்த சூழலில் பொழுதுபோக்கிற்காகத் திரைப்படங்களைப் பார்ப்பதில்
ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள். குறிப்பாகக்
கும்பகோணத்தில் இருந்த தமது உறவினரான அமரர்.திரு.சிங்காரம் அவர்கள், தட்டு ரிக்ஷா ஓட்டுவது உள்ளிட்டச்
சிறுசிறு வேலைகளைத் தமக்கு உட்பட பலருக்கும் பெற்று தந்து உதவியதை நன்றியுடன்
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் நினைவுகூர்கிறார்.
தீவிர நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகராக
இருந்தவர், புரட்சித்
தலைவர் எம்ஜிஆர் உள்ளிட்ட எந்த நடிகரின் திரைப்படங்களையும் பார்க்கத் தவறுவதில்லை.
கிராமத்து நண்பர்களுடன் அருகில் உள்ள மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு நடந்தும், வாடகை சைக்கிள்களிலும் சென்று
திரைப்படம் பார்த்து ஊர்த் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர்
மட்டுமின்றி, பொதுமக்களுக்கும்
கூட அக்காலத்தில் ஒரேயொரு பொழுதுபோக்கு அம்சம் திரைப்படங்கள் பார்ப்பதாகத்தான்
இருந்தது. மாட்டு வண்டியில் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளுக்குச் சென்று
திரைப்படம் பார்க்கும் பழக்கம் பரவலாக இருந்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இளமையில் வறுமை, கடின உழைப்பு, திரைப்பட மாயையென நாட்கள் நகர்ந்தன...
1971 இல் ஒருநாள், மே மாதவாக்கில் இராணுவத்தில் ஆள் எடுப்பதாகக்
குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் வருகிறது. ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
திருச்சி நகருக்குச் சென்று பயிற்சி மற்றும் பரிசோதனைகளில், RPF இல் பணிபுரிந்த உறவினர், கீழச்செங்கல்மேடு
அமரர்.திரு.ஆறுமுகம் மாமா அவர்களின் ஆலோசனைப்படி திறம்பட ஈடுபட்டு வீடு
திரும்பியவருக்கு, அடுத்த
ஒரு மாதத்தில் பணி தொடர்பானப் பயிற்சி அழைப்பு ஆணை வருகிறது. மகிழ்ச்சி
வெள்ளத்தில் குடும்பத்தினர் வழியனுப்பப் பெங்களூர்க்குச் சென்று 1971 ஜூலை 2 ஆம்
தேதியிலிருந்து ஆறு மாத காலப் பயிற்சியை மேற்கொள்கிறார்; தேர்வும் பெறுகிறார். தேர்வடைந்தவுடன் பணி
அமர்த்துதல் ஆணையைப் பெறுகிறார், வெற்றியை நோக்கிய முதல் நகர்வாகக் கொல்கத்தா துறைமுகத்தில் 1972 ஜனவரி
மாதத்தில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில் காவலராகத் தமது பணியை, எதிர்காலத்தைப் பற்றிய பல்வேறு
கனவுகளுடன் துவங்கினார்.
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில் வழங்கும்
சீருடையான காக்கி நிறத்தினாலான பேண்ட் தான் திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் தம்
வாழ்வில் அணியும் முதல் பேண்ட் ஆக இருந்தது. முதல் மாத சம்பளத்தை பெற்றோருக்கு
அனுப்பியவுடன் தமக்கு ஒரு கருப்பு நிற பேன்ட், ஒரு கோடு போட்ட சிவப்பு நிற சட்டை, ஒரு வெள்ளை நிற கேன்வாஸ் ஷூ என
வாங்கி அணிந்து கனவை நிஜமாக்கினார்.
1970' களில், வழக்கமாகக்
கால்சட்டை, லுங்கி,
வேஷ்டியென
அணிந்திருக்கும் உழைக்கும் வர்க்க இந்திய இளைஞனின் கனவு பேன்ட் அணிய வேண்டும்
என்பதிலிருந்து துவங்கியதானது, ஒட்டு
மொத்தச் சமூக வாழ்நிலையையும் பிழிந்துத் தருகிறது.
மத்திய அரசுப் பணியுடன் பெண் பார்க்கும் படலம்,
தமது
கிராமத்துக்கு ஐந்து, ஆறு
மைல்கள் தொலைவில் உள்ள கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், இரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த
அமரர்.திரு.வி.ஆறுமுகம் மற்றும் அமரர்.திருமிகு.பிச்சம்மாள் தம்பதியரின் இளைய
மகளான அமரர்.திருமிகு.கஸ்தூரி அவர்களை நாளது 05-12-1973 இல் மணம் கொள்கிறார்.
திரு.ஆறுமுகம் மற்றும் திருமிகு.பிச்சம்மாள் தம்பதியருக்கு, இரண்டு மகள்கள். அவற்றில் மூத்தவர்
திருமிகு.ரோஸ்பட்டு அவர்கள் உள்ளூரில் உள்ள தமது தாய்மாமனின் மகன் திரு.அ.மாசிலாமணி
அவர்களைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரான இரெட்டியூரிலேயே வசித்து வருகிறார்.
மனைவி வழி மைத்துனர்களாக அமரர்.திரு.பெருமாள், அமரர்.திரு.துரைசாமி, திரு.சிவசாமி, அமரர்.திரு.ராதா, திரு.முரளி, திரு.கண்ணன், திரு.கொளஞ்சி எனச் சிறப்பாக அமையப் பெற்றதுதான் திரு.கி.விஸ்வலிங்கள்
அவர்களின் குடும்பமாகும்.
மணவாழ்க்கையை சென்னையில் உள்ள மணலியில்
துவங்குகிறார், இனிமையான
கனவுகளுடன் திரு.கி.விஸ்வலிங்கம், திருமிகு கஸ்தூரி தம்பதியர் மூன்று ஆண் பிள்ளைகளைப்
பெற்றெடுக்கின்றனர்.
காலச்சுழற்சியில், விஸ்வலிங்கம் கஸ்தூரி தம்பதியர் தமது மூன்று
ஆண்பிள்ளைகளையும், கடுமையான
சூழலிலும் அவர்களைப் பொறியியல் பட்டதாரிகளாக வளர்த்தெடுத்தனர்.
பொறியாளராகிய மூத்த மகன் திரு.பாலகிருஷ்ணன்
அவர்கள் குடும்பத்தார் மருமகள் கவிதா மற்றும் பேத்தி நிலா ஆகியோருடன்
சிங்கப்பூரில் வசித்து வருகிறார். குடும்பத்தார் மருமகள் தனலட்சுமி, பேத்தி ஹரிணி மற்றும் பேரன் ஜோஹன்
ஆகியோருடன் திருநெல்வேலியில் வசிக்கும் இரண்டாவது மகன் திரு.இரவிக்குமார் அவர்கள்,
கம்ப்யூட்டர்
இஞ்ஜினியராவார், மூன்றாவது
மகன் திரு.சண்முகம் அவர்கள், மென்பொருள்
வல்லுனராகச் சென்னையில் உள்ள இன்போஸிஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஒருபுறம் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை
வளர்தலும், மறுபுறம்
முறையே தாய், மாமியார்,
தந்தையார்,
மாமனார்,
உடன்பிறந்தவர்கள்
எனக் காலமாவதும் தொடர்கிறது.
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் செய்தது மத்திய அரசுப்
பணி என்பதால் இந்தியாவின் பலப் பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயமும்,
ஒப்பந்தமும்
இருந்தது.
பணியாற்றிய இடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
1) பெங்களூர், கர்நாடக மாநிலம், 1971 ஜூலை 2.
2) LPT கொல்கத்தா துறைமுகம், மேற்கு வங்காளம், 1972.
3) MPT சென்னை துறைமுக அறக்கட்டளை, தமிழ்நாடு, 1973.
4) MRL சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மணலி, தமிழ்நாடு, 1975.
5) TPT தூத்துக்குடி துறைமுகம், தமிழ்நாடு, 1977.
6) SSP சேலம் எஃகு உருக்கு ஆலை, தமிழ்நாடு, 1982.
7) திருவனந்தபுரம் பயிற்சி மையம், பதவி உயர்வுப் படிப்பு, 1982.
8) கல்பாக்கம் பயிற்சி மையம், பதவி உயர்வுப் படிப்பு, 1983.
9) கல்பாக்கம் பயிற்சி மையம், பதவி உயர்வுப் படிப்பு, 1984.
10) SHAR ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம், ஆந்திர மாநிலம், 1985.
11) TPT தூத்துக்குடி துறைமுகம், தமிழ்நாடு, 1987.
12) இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன், புது டெல்லி, 1989.
13) ராஜஸ்தான் கோட்டா பயிற்சி மையம், பதவி உயர்வுப் படிப்பு, 1989.
14) RDM ஜின்ங் & லீடு சுரங்கம், உதய்பூர், ராஜஸ்தான், 1992.
15) DSP துர்காபூர் எஃகு உருக்கு ஆலை, மேற்கு வங்காளம், 1992.
16) ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி பிரச்சனை, லக்னோ, பைசாபாத், அயோத்யா, உத்தரப்பிரதேசம், 1992.
17) நாடளுமன்றம், உள்நாட்டு பாதுகாப்பு, புது டெல்லி, 1994.
18) தேர்தல் பாதுகாப்பு, ஜம்மு & காஷ்மீர், 1995.
19) தேர்தல் பாதுகாப்பு, மேற்கு காமெங் மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம், 1995.
20) ராஜஸ்தான் கோட்டா பயிற்சி மையம், பதவி உயர்வுப் படிப்பு, 1994.
21) BNP பவனாத்பூர் சுண்ணாம்புகல் சுரங்கம், பீகார், 1997.
22) VSP விசாகப்பட்டினம் எஃகு உருக்கு ஆலை, ஆந்திர மாநிலம், 1999.
23) Salar Jung Museum, ஹைதராபாத், ஆந்திர மாநிலம், 2001.
24) தொடர்பு அதிகாரி, ஹைதராபாத் உயர்நீதிமன்றம், ஆந்திர மாநிலம், 2002.
25) KKNPP கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாடு, 2003.
26) MAPS கல்பாக்கம் அணுமின் நிலையம், தமிழ்நாடு, 2006.
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை என்பது
துணைநிலை இராணுவப் படைகளுள் ஒன்றாகும். மேலும் அவ்வப்போது உள்நாட்டுக் கலவரச்
சூழல், தேர்தல்
பணி, நாடாளுமன்ற
பாதுகாப்பு பணியென ஈடுபடும் வகையில் அங்காங்கே பணியிடங்களில் பல்வேறு சவால்களையும்,
சாகசங்களையும்
எதிர்கொண்டிருந்தாலும், அடையாளாமாகக்
குறிப்பிடும் வகையில் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அமரர்.Dr.சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியப் பிரதமர்
அமரர்.திரு.P.V.நரசிம்மராவ்
மற்றும் திரு.பாலன் கே.நாயர் IPS, Ex.SSP போன்றோர்களுக்கானப் பாதுகாப்புப் பணி
மேற்கொண்டதையும், மொழி,
இனம் கடந்த
பல்வேறு நட்புகளுக்கிடையில் திரு.சீனிவாசன் Ex.DC, KKNPP மற்றும் திரு.சம்பத் Ex.AC, NLC அவர்களுடனான நீண்டநாள் தோழமையையும்
நினைவுகூருகிறார்.
தொடர்ந்து 33 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவை
புரிந்து குறிப்பிடத் தக்க மூன்று பதக்கங்களையும், குறிப்பிடத் தக்க ஒரு கடத்தல் சம்பவத்தைத் துணிவுடன் முறியடித்த
வகையில் துறைச் சார்ந்த வெகுமதி பெற்றதையெல்லாம் தமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்கு
தமது பங்களிப்பாகப் பெருமையுடன் கருதுகிறார்.
மத்திய அரசுப் பணியின் போக்கிற்கிணங்க பல்வேறு வட
மாநிலப் பகுதிகளில் பயணித்து இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மொழி, தட்ப வெப்ப பழக்க வழக்கங்களை
உணர்ந்தும், புழங்கவும்
செய்தனர். தீபாவளி, பள்ளி
கோடை விடுமுறை தினங்களில் வாய்ப்பில் சொந்தவூருக்குக் குடும்பத்தாருடன் செல்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தந்தக் கொண்டாட்டங்களுக்கே உரிய அனைத்துச்
சிறப்புகளுடனும், தீபாவளி
போன்ற தினங்களில் நிறையப் பட்டாசுகள் வாங்கி அக்கம்பக்கத்து உறவுகளுடன் கூடிக்
கொளுத்தி மகிழ்வார்கள், குறிப்பாக
அய்யா.திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் வெடி வெடிப்பதில் இன்றளவும் தீராத ஆர்வம்
கொண்டிருப்பவராவார்.
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் நேர்மையாகப்
பணியாற்றியவராவர், சவாலான
பணிகளைச் சிறப்புடன் செய்து படிப்படியாகப் பதவி உயர்வுகளை விரைந்துப் பெற்று உதவி
ஆய்வாளராகத் தொடர்ந்து திறம்படவும், பெருமிதத்துடனும் பணியாற்றி வந்தார்.
பணி செய்துவந்த ஊர்களில் திரு.கி.விஸ்வலிங்கம்
அவர்கள் தமது குடும்பத்தாருடன் நண்பர்கள் வட்டம் மற்றும் அவரது அதிகாரிகளின்
இல்லங்களுக்குச் சென்று பண்டிகை மற்றும் வார விடுமுறை தினங்களில் சந்தித்து
அவர்களது வாழ்த்துகளைப் பெற்று வருவதும், அவ்வாறே அவர்களும் விருந்தோம்புவது எல்லாம்
வாடிக்கையாக இருந்தது.
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களால் 1991 இல் கட்டத்
துவங்கப்பட்ட தமது 'பாக்கியம்
இல்லம்', மாடி
வீடாக 1999 இல் ஏறத்தாழ பத்து ஆண்டு கால பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில்
முடிக்கப்பட்டு விமரிசையாகப் புதுமனை குடிபுகு விழாக் கொண்டாடப்பட்டது.
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களால் எழுந்தருளப்பெற்ற
மதுரைவீரன் கோயில், கிருஷ்ணன்-பாக்கியம்
சமாதி மற்றும் பாக்கியம் இல்லம் என யாவும் சொந்தமாக எரியூட்டப்பட்ட செங்கல்
சூளையிலிருந்து எடுத்துக் கட்டப்பட்டவையாகும். அந்தச் செங்கல் சூளையில் சுடப்பட்ட
செங்கல் மற்றும் ஓடுகள் மற்ற உறவினர்களும் வீடு கட்ட உதவியாகவும் இருந்தது. மேலே
குறிப்பிடப்பட்டுள்ள பாக்கியம், கிருஷ்ணன்
என்பவர்கள் திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின் தாய், தந்தையுமாவர்.
பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் மூத்த
மகன் பாலகிருஷ்ணனும், நடுலவன்
இரவிக்குமாரும் ஒரே நேரத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் படித்ததும்,
அதே நேரத்தில்
சொந்தவூரில் வீடு கட்டத் துவங்கியதும் தான்.
பிள்ளைகளின் கல்விக்காகத்தான், திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் தனது
சிறு விவசாய நிலங்களை, அதாவது
நெல், வேர்க்கடலை,
ஊடுபயிரான எள்,
கம்பு, கேழ்வரகு, உளுந்து, தட்டைப்பயிறு என விளையக்கூடிய மாமரத்துக்கொல்லை
நிலம் மற்றும் ஜெயங்கொண்டம் ரோட்டில் அமையப்பெற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தையும்
எல்லாம் விற்றார். போக்கியம் என்ற வகையில் சுண்டிப்பள்ளம், இரெட்டியூரில் வாங்கியிருந்த
நிலங்களை அண்ணார் கி.நாகராஜன் மற்றும் அண்ணார் அ.மாசிலாமணியால் பராமரிக்கப்பட்ட
நிலங்களையும் மற்ற பிற காரணங்களுடன் திருப்பிக்கொடுத்து விட்டு முற்றிலும்
விவசாயத்தை விட்டு வெளியேறினார்.
பின்னாளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் என்ஹெச் 45சி சாலை விரிவாக்கத் திட்டத்தின் அடிப்படையில் இடம் கைக்கொள்ளப்பட்டு பாக்கியம் இல்லம் 2018 இல் இடிக்கப்பட்டது, அதே ஆண்டு இட நெருக்கடிக்கு மத்தியில் அய்யா திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களால் மீண்டும் 'பாக்கியம் இல்லம்' கட்டியெழுப்பப்பட்டு சொந்தவூரில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில்
ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று ஊரில் வசித்து வந்தநிலையில், தேவையை உணர்ந்த சிறுசிறு வியாபாரங்களை
சிறப்புடன் முன்னெடுத்தார். அதேவேளையில் சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் தம்மால் இயன்ற
பங்கேற்பையும், செயல்பாட்டையும்
உறுதியுடன் வழங்கித் தொடர்கிறார்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின்
விடியலுக்குப் பங்காற்றிய இந்திய மனித உரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர்
அய்யா.திரு.எல்.இளையபெருமாள் Ex.MP அவர்களின் மீது மிகுந்த மரியாதையும், எளியோர் அரசியலை முன்னிலும் தீவிரமாக
முன்னெடுத்துவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் MP
அவர்களின்
கருத்தாக்கங்களை, செயல்பாட்டை
ஆதரித்தும், ஊக்கப்படுத்தியும்
வருகிறார்.
மார்ச் 2019 இல் சிங்கப்பூரில் வசிக்கும் தன்
மூத்த மகனின் குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தவர், சிங்கைவாழ் தனித்தமிழ் பற்றாளர்
திரு.சோ.வீ.தமிழ்மறையான் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்
கொண்டதோடு தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகத்திற்கு குடும்பத்தாருடன்
வருகை தந்து பார்வையிட்டு, கழகத்தாரின்
பணிகளையும், திருவள்ளுவர்
தமிழ்வளர்ச்சிக் கழகத்தாரின் பணிகளையும் கேட்டறிந்து பாராட்டினார்.
குடும்ப நலத்துடன், பொது நலனுக்காவும் சேவையாற்றிவரும்
திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களின் வாழ்வியலையும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களும் அடியொற்றி
பின்பற்றத் தக்கவைகளேயாகும் எனச் சிங்கைவாழ் தனித்தமிழ் பற்றாளர்
திரு.சோ.வீ.தமிழ்மறையான் அவர்கள் வாயாரப் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில்தான் அய்யா.திரு.கி.விஸ்வலிங்கம்
அவர்களின் மனைவியார் திருமிகு.கஸ்தூரி அம்மையார் தமது 64 ஆம் வயதில் திடீரென உடல்
நலிவுற்று 29-12-2020 அன்று காலை10:40 மணியளவில் இறப்பைத் தழுவினார் என்ற செய்தி
குடும்பத்தில் இடியாய் இறங்கியது.
இறுதிச் சடங்குகள் மற்றும் நல்லடக்கம்
குடும்பத்தார், உறவினர்களின்
உணர்வெழுச்சியுடன் 30-12-2020 அன்று மாலை 05:00 மணியளவில் நடந்தேறியது.
கஸ்தூரி அம்மையார் விடைபெற்றார் !!!
கஸ்தூரி அம்மையாரின் மறைவிற்குப் பின் ஓராண்டு
நெருங்கியதையொட்டி 17-12-2021 அன்று சொந்தவூரான சுண்டிப்பள்ளம் கிராமத்தில் திதி
கொடுக்கும் சடங்குகள் உறவுகளால் செய்யப்பட்டு, பின் முதலாமாண்டு நினைவுநாளென அம்மையாரின் நினைவு
போற்றப்பட்டு வருகிறது.
மனைவியாரின் மறைவிற்குப் பின், மீளாத் துயரில் இருக்கும் சிறந்த குடும்பத்தலைவருக்கு அடையாளமாக விளங்கிடும் அய்யா.திரு.கி.விஸ்வலிங்கம் அவர்கள் அவ்வப்போது வயது மூப்பின் காரணமாகச் சிறுசிறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும், இன்றளவும் தற்சார்புடன், 73 வது வயதிலும் நாளும் அதிகாலையிலேயே எழுந்து, நடைப்பயிற்சி செய்து குளித்து மிடுக்கானத் தோற்றத்துடன் தயாராகி வலம் வருவது எனத் தொடங்கி, அன்றையச் செய்தித்தாள் பார்ப்பது சகிதம், பண்பாட்டு விழுமியங்களான அறம், நீதி, நேர்மை, தூய்மை மற்றும் வாய்மை போன்றவைகளைத் திறம்படவும், உறுதியுடனும் பேணிடும் பெருமகனார் அய்யா.திரு.கி.விஸ்வலிங்கம் அவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பண்புநலனை ஏற்கப்பெற்று குடும்ப வாழ்வில் வெற்றியடைவீராகுக !!!
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. (குறள் 31)
~சிவசாமி பிரமன்,
தலைமை ஆசிரியர் 'தமிழ் அமுதம்' இலக்கிய இதழ்,
சிங்கப்பூர்.
***
***
வாழ்த்திட:
தொலைபேசி:+919443970669.
மின்னஞ்சல்:link2vbala@yahoo.co.in.
Blog:http://www.eacformc.blogspot.com.
Facebook:https://www.facebook.com/profile.php?id=100004836047965.
சுண்டிப்பள்ளம் கிராமம்,
முத்துசேர்வாமடம் அஞ்சல்,
ஜெயங்கொண்டம் தாலுகா,
அரியலூர் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
612903.
***
No comments:
Post a Comment